உத்தமபாளையம் அருகே இரட்டைக்கொலை: மனைவி, மாமியாரை வெட்டிக் கொன்ற கூலித்தொழிலாளி
உத்தமபாளையம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, மாமியாரை கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்தார்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் அருகே கோம்பை அமுல்நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி பழனியம்மாள் (40). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
பழனியம்மாளின் தாயார் முத்தம்மாள் (60). அவருடைய கணவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனது மகள் பழனியம்மாள் வீட்டில் முத்தம்மாள் வசித்து வந்தார்.
இந்தநிலையில் பழனியம்மாளின் நடத்தையில் மணிகண்டனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து மணிகண்டனை முத்தம்மாள் கண்டித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், தனது மனைவியை ஆசைக்கு இணங்குமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், பழனியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த முத்தம்மாள் தடுக்க முயன்றார். அப்போது அவரையும் மணிகண்டன் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் 2 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை போலீசார் கைப்பற்றினர்.
கைதான மணிகண்டன், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், பழனியம்மாளுக்கும் திருமணமாகி 23 வருடங்கள் ஆகி விட்டன. எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் கூலி வேலை செய்து வந்தோம். பழனியம்மாளை ஆசைக்கு இணங்குமாறு அழைத்தால், அவர் மறுத்து விடுவார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
ஆத்திரத்தில் நான் அடிக்கும் போதெல்லாம் என்னுடைய மாமியார் என்னை திட்டுவார். எனது மாமியார் எங்களுடன் வசிப்பது பிடிக்கவில்லை. இதனால் 2 மகன்களையும் மாமியாரிடம் விட்டு விட்டு சொந்த ஊரான பெருமாள் கவுண்டன்பட்டிக்கு செல்லலாம் என்று பழனியம்மாளிடம் வலியுறுத்தி வந்தேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
வேறு நபருடன் தொடர்பு இருப்பதால் தான், அங்கிருந்து வர மறுக்கிறார் என்று பழனியம்மாள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு பழனியம்மாளை உல்லாசமாக இருக்க அழைத்தேன். ஆனால் அவர் வழக்கம்போல மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான், அரிவாளால் பழனியம்மாளை வெட்டினேன். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து என்னிடம் தகராறு செய்த மாமியார் முத்தம்மாளையும் வெட்டினேன். சிறிதுநேரத்தில் 2 பேரும் உயிர் இழந்து விட்டனர்.
கேரள மாநிலத்துக்கு தப்பி செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கி கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story