தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலம் என்ஜினீயரிங், கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை அதிகாரிகள் தகவல்


தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலம் என்ஜினீயரிங், கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 20 April 2019 10:30 PM GMT (Updated: 20 April 2019 8:07 PM GMT)

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மூலம் என்ஜினீயரிங், கலைக் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல், 

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வத்தலக் குண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என மொத்தம் 197 பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 71 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 9 ஆயிரத்து 296 மாணவர்கள், 10 ஆயிரத்து 743 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 39 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் என்ஜினீயரிங், கலைக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்பட இருக்கிறது. மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகினால் அவர்கள், இணையதளத்தில் இருந்து மாணவ-மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொடுப்பார்கள்.

அதனை பயன்படுத்தி என்ஜினீயரிங், கலைக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் மதிப்பெண் மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்களும் இந்த சான்றிதழை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story