அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் தர்ணா
பொதுப்பணித்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்ட திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழுவினர், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க நேற்று காலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் மூலம் திருமூர்த்தி அணையில் இருந்து 3-ம் மண்டல பாசனத்திற்கு 5 சுற்று தண்ணீர் வழங்க அரசு ஆணை பிறப்பித்து கடை மடைவரை வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பரம்பிக்குளம் பிரதான கால்வாய் மற்றும் கிளை கால்வாய்களுக்கு அருகில் உள்ள மேல்பகுதி விவசாயிகள் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் தண்ணீரை திருடி வருகின்றனர். இதனால் கடைமடை வரை தண்ணீர் சென்று சேராமல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தினமும் சுழற்சி முறையில் ரோந்து பணி மேற்கொண்டு கண்காணித்து திருட்டை தடுத்து வந்தனர்.
இந்த நிலையில் குண்டடம் கிளைகால்வாயில் விதிமுறைகளை மீறி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குண்டடம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியனிடம் புகார் செய்தோம்.
இதையடுத்து அவர் விவசாயிகளுடன் அந்த பகுதிக்கு சென்று, தண்ணீர் திருடுவதற்காக போடப்பட்டிருந்த குழாயை அகற்றிவிட்டு அலுவலகத்திற்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கோகுல கிருஷ்ணன் என்பவர், உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியனிடம் இதுகுறித்து கேட்டு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உதவி பொறியாளர் குண்டடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் கோகுலகிருஷ்ணன் தன்னுடன் பலரை அழைத்து சென்று பொதுப்பணித்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளார். அதன்பின்னரும் அவர்களை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குண்டடம் பொதுப்பணித்துறை அதிகாரிக்கு கொலைமிரட்டல் விடுத்து, அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், கண்காணிப்புக்குழு ஒன்றை அமைத்து இரவு நேர ரோந்து பணிகளை மேற்கொண்டு கடைமடைவரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story