ஓட்டப்பிடாரம் தொகுதியில் “50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெறும்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


ஓட்டப்பிடாரம் தொகுதியில் “50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெறும்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 25 April 2019 10:30 PM GMT (Updated: 25 April 2019 8:15 PM GMT)

“ஓட்டப்பிடாரம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெறும்“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளராக மோகன் அறிவிக்கப்பட்டு உள்ளார். வேட்பாளர் மோகன் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் மற்றும் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும். அதே போன்று நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் நிலை உள்ளது. தற்போது மீண்டும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி நடக்கிறது. ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை என்பதை நிரூபிப்போம். ஓட்டப்பிடாரத்தில் 7 முறை அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. இது அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருவதாக மக்கள் பலமுறை நிரூபித்து உள்ளார்கள். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்த தொகுதி வேட்பாளராக மோகன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இங்கு வந்து உள்ள தொண்டர்களின் எழுச்சியை பார்க்கும் போது, ஓட்டப்பிடாரம் தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெறும்.

வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறோம். 28-ந் தேதி புதுக்கோட்டையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

நானும்(கடம்பூர் ராஜூ), முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ.வும் இணைந்து கூட்டத்தை ஏற்பாடு செய்து உள்ளோம். இதில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் அதில் கலந்து கொள்ள உள்ளனர். அ.தி.மு.க. ஒரு கடல். அதில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பார்கள். அனைவரும் இணைந்து வெற்றிக்கனியை பறிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story