டி.கல்லுப்பட்டியில் பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து மறியல்


டி.கல்லுப்பட்டியில் பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து மறியல்
x
தினத்தந்தி 25 April 2019 11:00 PM GMT (Updated: 25 April 2019 11:45 PM GMT)

பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து டி.கல்லுப்பட்டியில் திருமங்கலம்-கொல்லம் நெடுஞ்சாலையில் ஏராளமானோர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

பேரையூர், 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து அவதூறு பேசி அதனை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரியும் பல்வேறு இடங்களில், குறிப்பாக மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் போராட்டங்கள் நடந்தன.

இந்தநிலையில் நேற்று டி.கல்லுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வன்னிவேலாம்பட்டி, வி.அம்மாபட்டி, சத்திரப்பட்டி, கிளான்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் டி.கல்லுப்பட்டியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். அப்போது அவர்கள் பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதற்கிடையே ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இந்த சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், டி.கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டர் விஜய்காந்திராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story