ஈரோட்டில் கைது செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தாரா? போலீசார் தீவிர விசாரணை


ஈரோட்டில் கைது செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தாரா? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 28 April 2019 11:30 PM GMT (Updated: 28 April 2019 6:48 PM GMT)

ஈரோட்டில் கைது செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் கொடுத்திருந்த புகார் மனுவில், ‘நான் கல்லூரியில் படித்து வந்தபோது ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 37) என்பவர் பழக்கமானார். அவர் தன்னை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அதை அவர் தனது செல்போனில் படம் எடுத்துக்கொண்டு இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் 2 முறை கர்ப்பமானேன். முதல் முறை கர்ப்பமானபோது மருத்துவமனைக்கும் 2-வது முறை மாத்திரை கொடுத்தும் ராதாகிருஷ்ணன் கருக்கலைப்பு செய்ய வைத்தார்.

மேலும் அவர் என்னுடைய தோழிகளின் செல்போன் எண்ணை என்னுடைய செல்போனில் இருந்து எடுத்துக்கொண்டு அவர்களையும் என்னை போல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு தெரிந்த நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

அதன் பேரில் போலீசார் ராதாகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தி அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் இளம்பெண்ணை ராதாகிருஷ்ணன் அழைத்து சென்ற விடுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை தற்போது போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள். மேலும் இளம்பெண், தன்னை போன்று தனது தோழிகளையும் ராதாகிருஷ்ணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று கூறி உள்ளதால், எத்தனை பெண்கள் ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story