வக்கீல்கள் தியாக மனப்பான்மையுடன் செயல்படவேண்டும் பல்கலைக்கழக துணை வேந்தர் பேச்சு
வக்கீல்கள் தியாக மனப்பான்மையுடன் செயல்படவேண்டும் என்று புதுவை பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மித்சிங் பேசினார்.
காலாப்பட்டு,
புதுச்சேரி காலாப்பட்டு சட்டக்கல்லூரியில் மாணவிகளுக்கான வழக்கு வாத போட்டி நடைபெற்றது. போட்டியை புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மித் சிங் தொடங்கிவைத்தார்.
இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு சட்டக்கல்லூரிகளை சேர்ந்த 28 அணிகள் கலந்துகொண்டன. இவர்கள், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை என்ற தலைப்பில் வாதாடினர்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மித்சிங் பேசுகையில், மாணவ பருவத்திலேயே இத்தகைய போட்டிகளில் மாணவிகள் கலந்துகொள்வதன் மூலம் தன்னம்பிக்கை பெற்று திடமான ஒரு வாதத்தை பிற்காலத்தில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்க முடியும். வெற்றி, தோல்வியை பாராமல் மாணவிகள் தொடர்ந்து இதுபோல் பல போட்டிகளில் கலந்துகொள்ளவேண்டும். அரசியல், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் மக்களின் பிரச்சினைகளோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்கள் வக்கீல்கள். சமுதாயத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வக்கீல்கள் தியாக மனப்பான்மையுடன் செயல்பட்டு வக்கீல் தொழிலுக்கு பெருமை சேர்க்கவேண்டும் என்றார்.