புதுப்பொலிவு பெறும் திண்டுக்கல் ரெயில் நிலையம்


புதுப்பொலிவு பெறும் திண்டுக்கல் ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 28 April 2019 10:45 PM GMT (Updated: 28 April 2019 11:14 PM GMT)

திண்டுக்கல் ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற்று வருகிறது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு 88 ரெயில்கள் வந்து செல்கின்றன. இதில் தினசரி 50 ரெயில்கள் வருகின்றன. மற்ற ரெயில்கள் வாராந்திர முறைப்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றன. இந்த ரெயில்கள் மூலம் தினசரி 5 ஆயிரம் பயணிகள் திண்டுக்கல்லுக்கு வருகின்றனர். இதில் வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் உள்ளனர். அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பழனிக்கு செல்வதற்காகவும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ரெயில்களில் திண்டுக்கல்லுக்கு வருகின்றனர். பின்னர் இங்கிருந்து கார், பஸ்கள் மூலம் கொடைக்கானல், பழனிக்கு செல்கின்றனர்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த திண்டுக்கல் ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கார், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள், பஸ்கள் ஆகியவற்றை நிறுத்தும் இடங்களை மேம்படுத்தி புதுப்பொலிவு கொடுக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

முதற்கட்டமாக பஸ்கள் வந்து செல்லும் வழித்தடத்தை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தார்சாலை அமைக்கப்பட்டது. பின்னர் அந்த வழித்தடத்தில் ஆட்டோக்கள் செல்ல முடியாதபடி தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் அந்த வழியாக பயணிகள் நடந்து செல்வதற்காக ‘பேவர் பிளாக்’ கற்கள் மூலம் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கார்கள் நிறுத்தும் இடத்துக்கு அருகில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு புற்கள் மூலம் தரையும் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டதும் திண்டுக்கல் ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன் காணப்படும். மேலும் பயணிகளுக்கான வசதிகளும் மேம்படுத்தப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story