“இடைத்தேர்தலுக்கு பிறகு ஆட்சி கவிழும் என்று மு.க.ஸ்டாலின் தப்புக்கணக்கு போடுகிறார்” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி


“இடைத்தேர்தலுக்கு பிறகு ஆட்சி கவிழும் என்று மு.க.ஸ்டாலின் தப்புக்கணக்கு போடுகிறார்” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 28 April 2019 10:30 PM GMT (Updated: 28 April 2019 11:42 PM GMT)

“இடைத்தேர்தலுக்கு பிறகு ஆட்சி கவிழும் என்று மு.க.ஸ்டாலின் தப்புக்கணக்கு போடுகிறார்“ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி,

ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. இங்கு அ.தி.மு.க. வெற்றி பெறும். தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்கும். இந்த பகுதியில் தி.மு.க.வுக்கு வாக்கு வங்கியோ, தொண்டர்களோ இல்லை. இங்கு அ.தி.மு.க., புதிய தமிழகம் மற்றும் கூட்டணி கட்சியினர்தான் உள்ளனர்.

அ.ம.மு.க. வேட்பாளருக்கு பணத்தை பெற்றுக்கொண்டு கட்சியை காட்டி கொடுத்தவர் என்ற அவப்பெயர் உள்ளது. அவருக்கு வாக்களிக்கும் எண்ணத்தில் மக்கள் இல்லை. இதனை தேர்தலுக்கு பிறகு தினகரன் உணருவார்.

கட்சி விட்டு கட்சி மாறி செல்பவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பது இயல்புதான். கொறடா முடிவை சபாநாயகரிடம் தெரிவித்து உள்ளார். அதன் மீது சபாநாயகர் விசாரணை நடத்தி முடிவை அறிவிப்பார். அதற்கும், இடைத்தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை.

தி.மு.க.வுக்கும், தினகரனுக்கும் கள்ள உறவு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்படக்கூடாது. அவ்வாறு செய்யப்பட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே உள்ள உறவு வெட்டவெளிச்சம் ஆகி உள்ளது. அவர்களின் கபடநாடகம் எடுபடாது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டத்துறையிலோ, நீதித்துறையிலோ, தேர்தல் ஆணையத்திலோ தலையிடுவது கிடையாது என்பது மதுரை மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டு இருப்பதன் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர்கள் அனைவரும் முதல்-அமைச்சருக்கு விசுவாசமாக உள்ளனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். ஏழைகளுக்கு தொண்டு செய்து வருகிறார். அவருக்கு பின்னால் இந்த இயக்கம், ஆட்சி வலுவாக உள்ளது. இதனை உடைக்க சிலீப்பர் செல் என்று நாடகம் போடுகிறார்கள். இது நடக்காது. இடைத்தேர்தலுக்கு பிறகு ஆட்சி கவிழ்ந்து விடும் என்று மு.க.ஸ்டாலின் தப்புக்கணக்கு போடுகிறார். அது ஒருபோதும் நடக்காது. மக்கள் முதல்-அமைச்சர் பின்னால் உள்ளனர். அவர் மீண்டும் ஆட்சியில் தொடர்ந்து கொண்டே இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறும்போது, ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் 75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று 2 முறை கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Next Story