செங்கத்தில் தடுப்புச்சுவரில் மோதி வேன் கவிழ்ந்தது 3 பேர் படுகாயம்


செங்கத்தில் தடுப்புச்சுவரில் மோதி வேன் கவிழ்ந்தது 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 May 2019 11:00 PM GMT (Updated: 11 May 2019 4:47 PM GMT)

செங்கத்தில் சாலை தடுப்புச்சுவரில் மோதி சுற்றுலா வேன் கவிழ்ந்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்கம், 

செங்கம் நகரில் துக்காப்பேட்டை முதல் மில்லத்நகர் வரை 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் அதை அகற்றி சாலையை அகலப்படுத்தி விட்டு பின்பு சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என அப்போதே பொதுமக்கள் கூறினர்.

சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்தது முதல் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள், கார் மற்றும் லாரிகள் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவையை அடுத்த உடுமலைப்பேட்டையில் இருந்து வேலூர் தங்ககோவிலுக்கு சுற்றுலா வேன் வந்தது. செங்கம் நகரின் செய்யாற்று பாலம் அருகே வந்தபோது சாலையில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்ததால் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் இருப்பது தெரியாமல் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் வந்த 15 பேரில் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அதில் ஆகாஷ் (வயது 14) என்பவர் மீது வேன் குப்புற கவிழ்ந்தது. சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக தீயணைப்புத்துறையினர், போலீசார், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போராடி பொக்லைன் எந்திரம் மூலம் சுற்றுலா வேனை கயிறு கட்டி அப்புறப்படுத்திய பின்னரே ஆகாசை மீட்டனர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு உள்ளதாக செங்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கூறினர்.

அதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story