85 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தவிர 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி எந்த சாதனையும் செய்யவில்லை சித்தராமையா கடும் தாக்கு


85 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தவிர 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி எந்த சாதனையும் செய்யவில்லை சித்தராமையா கடும் தாக்கு
x
தினத்தந்தி 12 May 2019 10:30 PM GMT (Updated: 12 May 2019 9:28 PM GMT)

85 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தவிர 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி எந்த சாதனையையும் செய்யவில்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

85 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தவிர 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி எந்த சாதனையையும் செய்யவில்லை என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பிரசார கூட்டம்

குந்துகோல் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மறைந்த சி.எஸ்.சிவள்ளியின் மனைவி குசுமாவதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள் குந்துகோல் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குந்துகோலில் நேற்று நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

பா.ஜனதா தோல்வி உறுதி

குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி. சிஞ்சோலி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த உமேஷ் ஜாதவ் காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக அவர் போட்டியிட்டுள்ளார். உமேஷ் ஜாதவின் மகன் சிஞ்சோலி தொகுதியில் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் உமேஷ் ஜாதவும், சட்டமன்ற இடைத்தேர்தலில் உமேஷ் ஜாதவின் மகனும் தோல்வி அடைவார்கள். அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

குந்துகோல் தொகுதிக்காக சி.எஸ்.சிவள்ளி ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். இது சி.எஸ்.சிவள்ளியின் தொகுதி. இந்த தொகுதி மக்கள் குசுமாவதி சிவள்ளியை வெற்றி பெற செய்வார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

85 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்...

காங்கிரஸ் கட்சி 135 ஆண்டுகள் பழமையானது. நாட்டுக்காக காங்கிரஸ் கட்சியினர் சிறைக்கு சென்று வந்துள்ளனர். முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி சிறைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால் நாட்டுக்காக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவர் கூட சிறைக்கு சென்றதில்லை. ஊழலில் ஈடுபட்டதால் மட்டுமே பா.ஜனதாவினர் சிறைக்கு சென்றுள்ளனர். இந்த வரலாறை மாற்ற முடியாது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நாடு வளர்ச்சி பாதையில் சென்றது. பொருளாதாரத்திலும் நாடு முன்னேற்றம் அடைந்தது. பிரதமராக மோடி பதவி ஏற்ற பின்பு நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்று விட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் 85 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக ரூ.1,990 கோடி செலவாகி உள்ளது. அவரது 5 ஆண்டுகால ஆட்சியில் 85 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தவிர எந்த ஒரு சாதனையையும் அவர் செய்யவில்லை. இதனை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story