சர்க்கரை ஆலையில் ரூ.88½ கோடி மோசடி புகார், கடனில் இருந்து மீட்க வேண்டும் - கலெக்டரிடம், கரும்பு விவசாயிகள் கோரிக்கை


சர்க்கரை ஆலையில் ரூ.88½ கோடி மோசடி புகார், கடனில் இருந்து மீட்க வேண்டும் - கலெக்டரிடம், கரும்பு விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 9:40 PM GMT)

தனியார் சர்க்கரை ஆலைகளில் ரூ.88½ கோடி மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கடனில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கரும்பு விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கடலூர்,

பெண்ணாடத்திலும், ஏ.சித்தூரிலும் 2 தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த இரு ஆலைகளும் ஒரே நிர்வாகத்துக்கு சொந்தமானதாகும். இந்த ஆலை நிர்வாகமானது, விவசாயிகளின் கையெழுத்தை பெற்றுக்கொண்டு, விவசாயிகள் பெயரில் சுமார் ரூ.88½ கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்து உள்ளதாக கூறப்படும் விவகாரம் கரும்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை உருவாக்கி உள்ளது.

கடனை வட்டியுடன் திரும்ப செலுத்துமாறு விவசாயிகளுக்கு வங்கிகளிடம் இருந்து நோட்டீசு வந்த பின்னரே இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மோசடி குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் கடலூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலைகளின் உரிமையாளர் தியாகராஜனை பிடித்து விசாரணைக்காக கடலூர் மத்திய குற்றப்பிரிவுக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் அவரை போலீசார் விடுவித்தனர். ஆனால் ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் கடன் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீது எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை.

இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு விவசாயிகளை வங்கி நிர்வாகம் நிர்ப்பந்திக்கும் நிலை உருவாகி உள்ளதால் ஆலை நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து கடனை திருப்பி செலுத்த வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அன்புசெல்வனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், பெண்ணாடம், ஏ.சித்தூர் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளரை மோசடி வழக்கில் கைது செய்ய வேண்டும், விவசாயிகளை கடன் வலையில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். 

Next Story