மாவட்ட செய்திகள்

செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீட்பு + "||" + 5 people rescued from the same family who were bonded in brick kilns

செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீட்பு

செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீட்பு
வேலூர் அருகே செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீட்கப்பட்டனர்.

வேலூர், 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவருடைய மனைவி பரிமளா. இவர்களுக்கு பிரியா (21), நித்யா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் பிரியாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த ராமு என்பவருடன் திருமணமாகி விட்டது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

முரளி அவருடைய மனைவி, 2 மகள்கள் மற்றும் மருமகன் என 5 பேரும் வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த புதூர் கிராமத்தில் உள்ள செங்கல்சூளையில் கடந்த 4 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் முன்பணமாக ரூ.20 ஆயிரம் வாங்கி உள்ளனர். இதற்காக இவர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். வாரம் ரூ.500 கூலியாக பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் கொத்தடிமைகளாக இருப்பது, கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு சங்க நிர்வாகிகளுக்கு கிடைத்துள்ளது. அவர்கள் இதுகுறித்து வேலூர் உதவி கலெக்டர் மெகராஜிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் அங்கு கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 5 பேரையும் மீட்டு அழைத்து வந்தார். அவர்களுக்கு கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டதற்கான சான்று மற்றும் காட்பாடி செஞ்சிலுவை சங்கம் சார்பில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், சமையல் பொருட்கள், வேட்டி, சேலை, சோப்பு ஆகியவற்றை வழங்கி அவர்களுடைய ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது செஞ்சிலுவை சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், அவைத்தலைவர் சிவசுப்பிரமணியன், துணைத்தலைவர் சீனிவாசன், பொருளாளர் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.


அதிகம் வாசிக்கப்பட்டவை