ஓசூர் அருகே சுற்றி திரிந்த 12 யானைகள் வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு


ஓசூர் அருகே சுற்றி திரிந்த 12 யானைகள் வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 17 May 2019 10:45 PM GMT (Updated: 17 May 2019 4:33 PM GMT)

ஓசூர் அருகே சுற்றி திரிந்த 12 யானைகளும் வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 12-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நீண்ட நாட்களாக சுற்றி திரிகின்றன. இவைகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 12 யானைகள், பென்னிக்கல் கிராமம் வழியாக ஜொனபண்டா மற்றும் ஒன்னல்வாடி ஆகிய கிராமங்களுக்குள் புகுந்தன. பின்னர், ஒன்னல்வாடி கிராமத்தில் வாழை தோட்டத்திற்குள் நுழைந்து 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன. தொடர்ந்து அந்த யானைகள் நேற்று முன்தினம் காலை ஜொனபண்டா ஏரியின் அருகே உள்ள தைலமர தோப்புக்குள் புகுந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் அருகில் உள்ள கிராமங்களில் சுற்றி திரிந்தன. நேற்று காலை, ஒன்னல்வாடி அருகே தொரப்பள்ளி பகுதியில் ஒரு மாந்தோப்பிலும், அங்குள்ள ஏரிப்பகுதியிலும் 12 யானைகளும் சுற்றி திரிந்தன.

இதுகுறித்து, கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று யானைகளை பட்டாசு வெடித்து சானமாவு வனப்பகுதிக்கு விரட்டினர். இதையொட்டி யானைகள் அப்பகுதியில் உள்ள சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டன. யானைகள் சாலையை கடக்க ஏதுவாக இருபுறமும் சிறிது நேரத்திற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த 12 யானைகளும் வனப்பகுதிக்குள் சென்று விட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story