கந்திகுப்பத்தில் கடும் வறட்சி: தண்ணீரை பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கும் அவலம்


கந்திகுப்பத்தில் கடும் வறட்சி: தண்ணீரை பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கும் அவலம்
x
தினத்தந்தி 17 May 2019 10:30 PM GMT (Updated: 17 May 2019 4:47 PM GMT)

கந்திகுப்பத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பர்கூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கந்திகுப்பம். இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ஆழ்துளை குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கடுமையான வறட்சி காணப்படுகிறது.

ஒகேனக்கல் குடிநீரும் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் ஆழ்துளை குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. குடிநீர் இன்றி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் எடுத்து வர குறைந்தது 2 கி.மீ. தூரம் சென்று வருகிறோம். ஒரு சில நாட்களில் அங்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் தற்போது 4 வீடுகளை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஒரு டிராக்டர் தண்ணீர் ரூ.750 என விலைக்கு வாங்கி பகிர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக முதியவர்கள், பெண்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வர முடிவதில்லை. எங்கள் பகுதிகளில் குடிநீர் பொது குழாய் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியிலும் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story