பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி
x
தினத்தந்தி 17 May 2019 9:45 PM GMT (Updated: 17 May 2019 7:31 PM GMT)

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி தேர்தல் அதிகாரி சாந்தா தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர், 

நாடாளுமன்ற தேர்தலன்று பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் வாக்குப்பதிவினை உறுதி செய்த எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஆகியவை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அதில் மத்திய துணை ராணுவ வீரர்களும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 23-ந்தேதி காலை 8 மணிக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ள 306 அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதனை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா தொடங்கி வைத்து பேசுகையில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 14 எண்ணிக்கையிலான மேஜைகள் அமைக்கப்பட்டு பல்வேறு சுற்றுகளாக எனது தலைமையில் எண்ணப்பட உள்ளது. ஒவ்வொரு மேஜைக் கும் ஒரு கண்காணிப்பாளர், கண்காணிப்பு உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என மூன்று நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன், அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விபரம் அறிவிப்பு பலகையில் எழுதப்பட வேண்டும். இவைதவிர ஒவ்வொரு சுற்றுக்கான விபரம் அந்தந்த வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் ஒலிப்பெருக்கியிலும் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கை அன்று அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும், எவ்வாறு வாக்கு எண்ணிக்கையை கையாள வேண்டும் என்பது குறித்தும் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் செயல்படுவது குறித்தும் பேசினார்.

பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, பெரம்பலூர் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராஜராஜன் (பொது), கீதாலட்சுமி (தேர்தல்), தாசில்தார்கள் மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story