நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் வழக்குப்பதிவு செய்யாத இன்ஸ்பெக்டருக்கு 1½ ஆண்டு சிறை சாத்தூர் கோர்ட்டு தீர்ப்பு


நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் வழக்குப்பதிவு செய்யாத இன்ஸ்பெக்டருக்கு 1½ ஆண்டு சிறை சாத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 18 May 2019 2:40 AM IST (Updated: 18 May 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் வழக்குப்பதிவு செய்யாத இன்ஸ்பெக்டருக்கு 1½ ஆண்டு சிறை தண்டனை விதித்து சாத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சாத்தூர்,

சிவகாசியை சேர்ந்த துரை என்பவரின் மனைவி சுகன்யாவுக்கும் (வயது 19), பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 17.11.2013 அன்று சுகன்யாவை அந்த பெண் திட்டியதால் மனமுடைந்து தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிவகாசி நீதிமன்ற நடுவர் நீதிபதி ஜோசப்ஜாய் ஆஸ்பத்திரிக்கு சென்று சுகன்யாவிடம் மரண வாக்குமூலம் வாங்கினார்.

3 நாட்கள் கழித்து சுகன்யா இறந்துவிட்ட நிலையில் இதுதொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கையை கேட்டு போலீஸ் நிலையத்திற்கு நீதிமன்றத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை என்று தெரியவந்ததும் நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தருக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்து உத்தரவிட்டது. அப்படி இருந்தும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து நீதிபதி ஜோசப்ஜாய், நேரடியாக மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டுள்ளார். அதன்பேரில் மாவட்ட நீதிபதியோ, சாத்தூர் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கை ஏற்று விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கை நீதிபதி சண்முகவேல்ராஜ் விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அதில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாத சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தருக்கு 1½ ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story