நெல்லிக்குப்பம் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி


நெல்லிக்குப்பம் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 18 May 2019 4:00 AM IST (Updated: 18 May 2019 4:21 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

நெல்லிக்குப்பம், 

பண்ருட்டி அடுத்த வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தொண்டைமான். இவரது மகன் மணிமாறன்(வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் மகன் செல்வக்குமார் (26). இவர்கள் இருவரும் கடலூர் வழியாக புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பினர்.

அப்போது கடலூரில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் வரை செல்லும் சுங்கச்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளி கிராம்பட்டு என்ற இடத்தில் இருக்கும் வளைவில் திரும்பினர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கியது.

இதில் இருவரும் படுகாயமடைந்து, அங்கேயே மயங்கிய நிலையில் கிடந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது விபத்தில் படுகாயடைந்த மணிமாறன், செல்வக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பது தெரியவந்தது. பின்னர், அவர்களது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு ஏதேனும் வாகனம் மோதி விபத்து நடந்ததா, அல்லது அவர்களாகவே விபத்தில் சிக்கினரா என்று விசாரித்து வருகின்றனர். சுங்கச்சாலையில் இதுபோன்று அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி நேர்ந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் போதிய இடங்களில் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Next Story