கும்பகோணம் ரெயில் நிலையத்தில், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆய்வு , தாம்பரம்- செங்கோட்டை ரெயிலை விரைவில் இயக்க கோரிக்கை


கும்பகோணம் ரெயில் நிலையத்தில், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆய்வு , தாம்பரம்- செங்கோட்டை ரெயிலை விரைவில் இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 17 May 2019 10:30 PM GMT (Updated: 17 May 2019 11:25 PM GMT)

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் நேற்று திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அஜய்குமார் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் தாம்பரம்- செங்கோட்டை அந்தியோதயா ரெயிலை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

கும்பகோணம்,

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அஜய்குமார் நேற்று காலை ஆய்வு செய்தார். சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்த அவர் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பயணிகள் பயன்படுத்தும் கட்டண கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். ரெயில் நிலையத்தை சுற்றி நடந்து சென்று அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட அவர் ரெயில்களின் இயக்கம் குறித்து ரெயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் திருச்சி ரெயில்வே கோட்ட இயக்கம், வணிகம், பொறியியல் உள்பட அனைத்து பிரிவு உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர். முன்னதாக திருச்சி ரெயில்வே கோட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர் கிரி, கும்பகோணம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுசெயலாளர் சத்தியநாராயணன் மற்றும் கும்பகோணம் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அஜய்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் 2 மற்றும் 3-வது நடைமேடைகள் விரிவாக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும். அந்த பணிகள் முடியும் வரை அதிக பெட்டிகள் கொண்ட ரெயில்களின் கிராசிங்கை தவிர்க்க வேண்டும்.

தாம்பரம்- செங்கோட்டை அந்தியோதயா ரெயிலை உடனடியாக அறிவிக்கப்பட்ட தடத்தில் இயக்க வேண்டும், சென்னை- தூத்துக்குடி இடையே முன்பு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ஜனதா விரைவு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். மயிலாடுதுறை- மைசூர் ரெயிலை நாமக்கல் வழியாக இயக்க வேண்டும், தஞ்சை ரெயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் மேற்கூரை அமைக்க வேண்டும், பாபநாசம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், கும்பகோணம்- விருதாச்சலம் புதிய ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தஞ்சை- விழுப்புரம் இடையே இரட்டை வழி ரெயில் பாதை அமைக்க ரெயில்வே அமைச்சகத்துக்கு கருத்துரு அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அஜய்குமார் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Next Story