போச்சம்பள்ளியில், உலக சாதனைக்காக 48 மணி நேரம் தொடர் தெருக்கூத்து நிகழ்ச்சி


போச்சம்பள்ளியில், உலக சாதனைக்காக 48 மணி நேரம் தொடர் தெருக்கூத்து நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 May 2019 3:30 AM IST (Updated: 18 May 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

போச்சம்பள்ளியில் உலக சாதனைக்காக 48 மணி நேரம் தொடர்ந்து தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. அப்போது 36 அடி உயரம் உள்ள பனை மர உச்சியில் இருந்து பூஜைசெய்து பிரசாதங்களை வாரி வீசியதை பக்தர்கள் மடியேந்தி வாங்கி சாப்பிட்டனர்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஊராட்சி கோணணூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உலக சாதனைக்காக தெருக்கூத்து கலைஞர்களால் 48 மணி நேரம் தொடர்ந்து தெருக்கூத்து நிகழ்ச்சி கடந்த 15-ந் தேதி இரவு தொடங்கியது.

நேற்று காலை வரையில் 48 மணி நேரம் இரவு, பகல் இடைவிடாமல் நிகழ்ச்சி நடந்தது. இதில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்கள் 36 மணி நேரம் அர்ச்சுனன் தபசு என்னும் நாடகமும், 12 மணி நேரம் தேவபட்டம் என்ற நாடகமும் நடத்தினார்கள்.

உலக சாதனையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். அப்போது தெருக்கூத்தில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக அர்ச்சுனன் தபசு, மரம் ஏறும் நிகழ்ச்சி ஆகியவை கோவில் வளாகத்தில் நடந்தது. முன்னதாக சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 36 அடிக்கு மேல் உயரம் உள்ள பனை மரம் நடப்பட்டது.

தொடர்ந்து அர்ச்சுனன் தவசு வேடத்தில் பனை மரத்தின் ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் பாடியவாறு நாடக கலைஞர் ஒருவர் ஏறினார். தொடர்ந்து மரத்தின் உச்சியில் இருந்து அர்ச்சுனன் தவம் புரிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வானத்தை சுற்றி கருடன்கள் வலம் வந்தது.

அந்த நேரம் அர்ச்சுனன் மரத்தின் மீது இருந்து வில்வ இலை, எலுமிச்சை, வாழைப்பழம், பொறிகடலை போன்றவற்றை வாரி வீசினார். அப்போது ஆண்களும், பெண்களும் போட்டி போட்டு மடியேந்தி பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டனர்.

அதை சாப்பிட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story