ஈரோட்டில் பரபரப்பு வங்கியின் லிப்டில் சிக்கிய காவலாளி
ஈரோட்டில் வங்கியின் லிப்டில் சிக்கிய காவலாளி 1½ மணிநேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டார்.
ஈரோடு,
ஈரோடு பஸ் நிலையம் அருகில் சத்தி ரோட்டில் உள்ள 3 அடுக்குமாடி கட்டிடத்தில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியின் காவலாளியாக ஈரோடு குமலன்குட்டை செல்வம்நகரை சேர்ந்த பழனிசாமி (வயது 65) என்பவர் நேற்று பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் காலை 9 மணிஅளவில் 3-வது மாடிக்கு சென்றார். பின்னர் அவர் கீழே இறங்குவதற்காக லிப்டில் ஏறினார். அந்த லிப்ட் தரைதளம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் திடீரென லிப்ட் பாதி வழியிலேயே நின்றது.
வங்கி திறக்கப்படாததால் அங்கு பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் அவர் கூச்சலிட்டும் உதவிக்கு யாரும் வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பழனிசாமி செய்வதறியாது தவித்தார். மேலும், அவரிடம் செல்போன் இல்லாததால் யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இந்தநிலையில் காலை 9.45 மணிஅளவில் வங்கியின் ஊழியர் ஒருவர் அங்கு வந்தார். அவர் லிப்ட்டை பார்த்தபோது, அது பாதி வழியில் நின்றிருப்பதும், அதில் காவலாளி பழனிசாமி சிக்கி இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு அவர்கள் லிப்டின் அவசரகால உதவி சாவியை எடுத்து வந்து லிப்டின் கதவை திறந்தனர். அதன்பின்னர் பழனிசாமி லிப்டில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். சுமார் 1½ மணிநேரத்துக்கு பிறகு பழனிசாமி பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story