நீலகிரி மலைபிரதேசத்தை பாதுகாக்க தனி சட்டம் வேண்டும் கவர்னரிடம் மனு
நீலகிரி மலைபிரதேசத்தை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த 17-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க வந்தார். தொடர்ந்து நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது, நீலகிரி மாவட்டத்தில் இயற்கை அழகையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால், ரோட்டரி சங்க தலைவர் முரளிதரன் கட்டாரியா ஆகியோர் ஊட்டி ராஜ்பவனில் தங்கியுள்ள கவர்னரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தென்மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மலைப்பகுதி உலக அளவில் சுற்றுச்சூழல் மண்டலமாக இருக்கிறது. தற்போது இங்கு வனத்துறையை பாதுகாக்க ஒரு சட்டம், சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு சட்டம், குடிநீரை பாதுகாக்க ஒரு சட்டம் என 3 சட்டங்கள் உள்ளது. இவை வெவ்வேறு துறையின் கீழ் வருவதால் மலைப்பிரதேசத்தை பாதுகாக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே மலைப்பகுதியை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வரவேண்டும்.
1991-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மலைப்பகுதியை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கினார். அதன் முலம் தற்போது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டுவருகிறது.
இருந்தாலும் மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தின் அழகையும், வனங்களையும், சுற்றுச்சூழலையும், மலைப்பகுதியையும் பாதுகாக்க மலைப்பாதுகாப்பு தனி சட்டம் கொண்டு வர வேண்டும். அல்லது இதற்கான கொள்கையை வகுக்க மாநில அரசின் முலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும் என தெரித்தார். இந்த தகவலை நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் தெரிவித்தார்.
Related Tags :
Next Story