ஓட்டப்பிடாரம் அருகே இளம்பெண் மர்மசாவு


ஓட்டப்பிடாரம் அருகே இளம்பெண் மர்மசாவு
x
தினத்தந்தி 19 May 2019 10:45 PM GMT (Updated: 19 May 2019 10:19 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சுந்தரலிங்ககாலனியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 36). இவருடைய மனைவி தங்கமாரி (32). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இசக்கிமுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆரைக்குளம் ஊருக்கு கிழக்கே உள்ள ஒரு தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்கு உள்ள கோழி பண்ணையை பராமரித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் இசக்கிமுத்து ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்று விட்டார். வீட்டில் தங்கமாரி மற்றும் பிள்ளைகள் இருந்தனர். மதியம் வீட்டுக்கு திரும்பிய இசக்கிமுத்து, தங்கமாரியை எங்கே என்று பிள்ளைகளிடம் கேட்டார். அதற்கு தோட்டத்துக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை அவர் வரவில்லை என்று கூறினர்.

இதனால் இசக்கிமுத்து காட்டுப்பகுதியில் சென்று தனது மனைவியை தேடினார். அப்போது அங்கு ஒரு மரத்தில் தங்கமாரி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பசுவந்தனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார், தங்கமாரியின் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story