டிப்ளமோ படித்தவர்களுக்கு கடற்படையில் வேலை


டிப்ளமோ படித்தவர்களுக்கு கடற்படையில் வேலை
x
தினத்தந்தி 20 May 2019 5:10 AM GMT (Updated: 20 May 2019 5:10 AM GMT)

கடற்படையில், டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

டிப்ளமோ படித்தவர்களுக்கு கடற்படையில் பணி வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 172 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘குரூப்-பி’ பிரிவின் கீழ் வரும் இந்த பணியிடங்கள் நான்-கெசட்டடு தரத்திலானவை. இந்த அழைப்பின் மூலம் மொத்தம் 172 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மெக்கானிக்கல் பிரிவில் 103 இடங்களும், எக்ஸ்புளோசிவ் பிரிவில் 69 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி

சார்ஜ்மேன் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், புரொடக்‌ஷன் ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ படிப்பினை நிறைவு செய்திருக்கவேண்டும். அதேசமயம் கெமிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் எக்ஸ்புளோசிவ் பிரிவு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ரூ.205-யை கட்டணமாக செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு முறை

எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான தேர்வுநாள், இணையதளத்தில் வெளியாகும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். மே 26-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.joinindiannavy.gov.in மற்றும் www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


Next Story