கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கக்கோரி, கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு ஓவேலி மக்கள் போராட்டம்
வனத்துறை சோதனைச்சாவடி வழியாக கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கக்கோரி ஓவேலி பேரூராட்சி மக்கள் கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் சட்டப்பிரிவு-17 ன் கீழ் கொண்டு வரப்பட்ட நிலங்கள் உள்ளது. இவ்வகை நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளன. இதனால் எந்தவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என வருவாய், வனம், காவல் துறையினர் தடை விதித்து உள்ளனர்.
இந்த நிலையில் கூடலூர் தாலுகாவுக்குட்பட்ட ஓவேலி பேரூராட்சி முழுவதும் பட்டா நிலம் கிடையாது. சட்டப்பிரிவு-17ன் கீழ் கொண்டு வரப்பட்ட நிலமே உள்ளது. மேலும் ஓவேலிக்குள் செல்லும் சாலையில் சோதனைச்சாவடியும் உள்ளது. இங்கு போலீசார், வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். கட்டுமான பொருட்களை எடுத்து சென்றாலும் வனத்துறை, போலீசார் தடுத்து வருவதாக ஓவேலி பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையீட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்தும், சோதனைச்சாவடி வழியாக கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கக்கோரி கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று பகல் 12 மணிக்கு ஓவேலி பகுதி மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்துக்கு முருகையா தலைமை தாங்கினார். கந்தசாமி, ஜாபர், குஞ்சுமுகமது, பாஸ்கரன், கேதீசுவரன், கண்மணி, சின்னவர், விவசாய சங்க பிரதிநிதி ஆனந்தராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டது. தொடர்ந்து தாசில்தார் ரவியிடம் போராட்ட குழுவினர் கோரிக்கை மனு அளித்தனர். இந்த போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story