ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் 47 பேர் மீது போலீசார் வழக்கு - தூத்துக்குடியில் திடீர் பரபரப்பு


ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் 47 பேர் மீது போலீசார் வழக்கு - தூத்துக்குடியில் திடீர் பரபரப்பு
x
தினத்தந்தி 20 May 2019 11:15 PM GMT (Updated: 20 May 2019 7:57 PM GMT)

நாளை முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ள சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொதுமக்கள் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த துயர சம்பவம் நடந்து நாளையுடன் (புதன்கிழமை) ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இதன் நினைவு தினம் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள், நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நினைவேந்தல் கூட்டத்தில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவேந்தல் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.

இந்த நிலையில் தூத்துக்குடி நகர மற்றும் புறநகர் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நினைவேந்தல் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் ஸ்டெர்லைட் போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள சிப்காட், புதுக்கோட்டை போலீஸ் நிலையங்களில் 25 பேர் மீதும், தூத்துக்குடி நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் 22 பேர் மீதும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 107 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்காக நேற்று காலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பலர் தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story