கொலை மிரட்டல் எதிரொலி: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மதுரை காதல் ஜோடி தஞ்சம்


கொலை மிரட்டல் எதிரொலி: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மதுரை காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 20 May 2019 11:11 PM GMT (Updated: 20 May 2019 11:11 PM GMT)

கொலை மிரட்டல் எதிரொலியாக பாதுகாப்பு கேட்டு, தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல்ஜோடியினர் தஞ்சம் அடைந்தனர்.

தேனி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள இ.புதுப்பட்டியை சேர்ந்த முருகன் மகள் டயானா (வயது 21). இவரும், உசிலம்பட்டி அருகில் உள்ள டி.செட்டிபட்டியை சேர்ந்த வேல்முருகன் மகன் ராகவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.

அவர்களுடன் செங்கதிர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருந்தமிழரசு ஆகியோரும் வந்தனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் டயானா ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நானும், ராகவனும் காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு இருதரப்பினர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், கடந்த மாதம் 29-ந்தேதி மதுரை தமுக்கம் அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் சேர்ந்து வாழ முடிவு செய்த நிலையில், கடந்த 9-ந்தேதி மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் எங்களிடம், என்னுடைய குடும்பத்தினர் தகராறு செய்து, என் கழுத்தில் கிடந்த தங்க தாலியை அறுத்து விட்டனர்.

இதுகுறித்து மதுரை கரிமேடு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்தேன். அதன்பேரில் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர்கள் எழுதிக் கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

பின்னர், மீண்டும் எனது குடும்பத்தினரும், உறவினர்களும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும், எனது கணவரின் வீட்டுக்கும் சிலர் சென்று அவருடைய பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். தற்போது நாங்கள் 2 பேரும் தேனி என்.ஆர்.டி. நகரில் தற்காலிகமாக வசித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் காதல்ஜோடி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story