ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி கோவை பள்ளி மாணவன் சாவு


ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி கோவை பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 20 May 2019 10:30 PM GMT (Updated: 20 May 2019 11:57 PM GMT)

ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி கோவை பள்ளி மாணவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் சண்முகம். வியாபாரி. இவருடைய மனைவி லோகநாயகி. இவர்களது மகன் ராஜா அண்ணாமலை (வயது 14). கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறையையொட்டி கோலார்பட்டியில் உள்ள உறவினர் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு ராஜா அண்ணாமலை வந்தான்.

இந்த நிலையில் நேற்று உறவினர்களுடன் அவன் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணைக்கு எதிரே உள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றான். அப்போது ஆழமான பகுதிக்கு ராஜா அண்ணாமலை சென்றதாக தெரி கிறது.

சிறிது நேரத்தில் எதிர்பாராதவிதமாக தடுப்பணையில் மூழ்கி தத்தளித்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது உறவினர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம்போட்டனர். உடனே அந்த பகுதியை சேர்ந்த சிலர் தடுப்பணையில் குதித்து ராஜா அண்ணாமலையை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக ஆழியாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அவனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜா அண்ணாமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆழியாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே கடந்த 1-ந்தேதி தடுப்பணையில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர் ஒருவர் இறந்தார். தற்போது மீண்டும் தடுப்பணையில் மூழ்கி கோவை பள்ளி மாணவன் இறந்த சம்பவம் ஆழியாறு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story