சேலம் என்ஜினீயரிங் கல்லூரியில், வாக்கு எண்ணும் அறைகளில் கலெக்டர் ரோகிணி ஆய்வு


சேலம் என்ஜினீயரிங் கல்லூரியில், வாக்கு எண்ணும் அறைகளில் கலெக்டர் ரோகிணி ஆய்வு
x
தினத்தந்தி 21 May 2019 10:30 PM GMT (Updated: 21 May 2019 8:57 PM GMT)

சேலம் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் அறைகளில் கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 8 லட்சத்து 9 ஆயிரத்து 760 ஆண்கள், 8 லட்சத்து 2 ஆயிரத்து 132 பெண்கள், இதரர் 90 பேர் என மொத்தம் 16 லட்சத்து 11 ஆயிரத்து 982 வாக்காளர்கள் உள்ளனர். இதில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தலில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 916 ஆண்கள், 6 லட்சத்து 9 ஆயிரத்து 846 பெண்கள், இதரர் 47 பேர் என மொத்தம் 12 லட்சத்து 48 ஆயிரத்து 809 பேர் வாக்களித்து உள்ளனர்.

அதன்படி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 77.57 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேலம் அருகே கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது.

வாக்குகள் எண்ணுவதற்காக சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அறைகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வாக்கு எண்ணும் பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனிடையே சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறித்து நேற்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வாக்கு எண்ணும் நாளன்று அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும், என்றார்.

Next Story