பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பே வாகனங்களை போக்குவரத்து துறை ஆய்வு செய்யவேண்டும் பெற்றோர் சங்கம் வலியுறுத்தல்
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பே வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பெற்றோர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காரைக்கால்,
கோடை விடுமுறை முடிவடைவதையொட்டி வருகிற 3-ந்தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜாவை நேரில் சந்தித்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கத் தலைவர் வின்சென்ட், செயலர் ரவிச்சந்திரன் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி வாகனங்களை, கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முன்பே, வட்டார போக்குவரத்துறை சார்பில் ஆய்வு செய்வது வழக்கம். தற்போது கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்தநிலையில் பள்ளி வேன்கள் உள்ளிட்ட வாகனங்களை முன்கூட்டியே போக்குவரத்து துறை ஆய்வு செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிடவேண்டும்.
முக்கியமாக, பள்ளி வாகனங்களின் காப்பீடு, ஓட்டுனர் உரிமம், முதலுதவிப்பெட்டி, தீயணைப்பு சாதனம், வாகனம் இயங்கும் நிலை, வாகன இருக்கை, பிரேக் உள்ளிட்ட வசதிகளை முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். சரி இல்லாத வாகன உரிமையாளர்கள் மற்றும் பள்ளிகளுடன் எந்த சமரசமும் செய்யக்கூடாது. அதேபோல், பள்ளி வாகனம் தனியார் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றக்கூடாது. வாகனங்களில் எக்காரணம் கொண்டும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தகூடாது. மாணவிகள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிகள், கல்லூரிகளில் காலை, மாலை வேளையில் பள்ளி வாயிலில் பெண் காவலர்களைப் பணியமர்த்தி, மாணவிகள் பாதுகாப்புடன் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story