ஈரோட்டில் பயங்கரம் தாயை அடித்துக்கொன்று மகன் தற்கொலை


ஈரோட்டில் பயங்கரம் தாயை அடித்துக்கொன்று மகன் தற்கொலை
x
தினத்தந்தி 22 May 2019 11:15 PM GMT (Updated: 22 May 2019 9:37 PM GMT)

ஈரோட்டில் தாயை அடித்துக்கொன்று மகன் தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு,

ஈரோடு சாஸ்திரிநகர் காமராஜ்வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மனைவி அருள்மணி (வயது 60). இவர்களுடைய ஒரே மகன் ராஜேஷ் (33). பழனியப்பன் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். அவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அருள்மணி கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும், அவர் படுத்த படுக்கையாகவே இருந்ததால் மகன் ராஜேஷ் உடனிருந்து கவனித்தார்.

எம்.காம். பட்டதாரியான ராஜேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. ஆனால் 2 மாதத்திலேயே மனைவி பிரிந்து சென்றுவிட்டார். ராஜேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி மது அருந்துவதால் தாய் அருள்மணி, ராஜேசை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

அடித்துக்கொலை

இந்த நிலையில் நேற்று மதியம் ராஜேஷ் குடிபோதையில் வீட்டுக்கு சென்றார். அப்போது அருள்மணியுடன் அவர் தகராறில் ஈடுபட்டார். மேலும், ஆத்திரம் அடைந்த ராஜேஷ் தனது தாயை அடித்துள்ளார். இதனால் அருள்மணி தனது தம்பியான ஈரோடு ஸ்டோனிபாலம் பகுதியை சேர்ந்த செந்தில்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, ராஜேஷ் அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்து உள்ளார்.

அதன்பிறகும் அருள்மணியை ராஜேஷ் தொடர்ந்து தாக்கினார். இதில் அவருடைய உடலில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அருள்மணி படுக்கையிலேயே உயிரிழந்தார். மதுபோதையில் காணப்பட்ட ராஜேஷ் தாயை கொலை செய்த துயரத்தில் தனது கையை தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை

இந்த நிலையில் மாலை 6 மணிஅளவில் செந்தில்குமார் சாஸ்திரிநகரில் உள்ள அருள்மணியின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டு வாசலில் ராஜேஷ் கையில் ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார். தொடர்ந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது படுக்கையிலேயே அருள்மணியும் பிணமாக கிடந்ததை பார்த்து செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதன்பின்னர் இறந்து கிடந்த அருள்மணி, ராஜேஷ் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டில் தாயை கொன்று மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story