தஞ்சை சட்டசபை, நாடாளுமன்ற தொகுதியில் 13 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டன


தஞ்சை சட்டசபை, நாடாளுமன்ற தொகுதியில் 13 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டன
x
தினத்தந்தி 23 May 2019 11:00 PM GMT (Updated: 23 May 2019 7:04 PM GMT)

தஞ்சை சட்டசபை, நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 13 வாக்குப்பதிவு எந்திரங் களில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவிபாட் எந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டன.

தஞ்சாவூர்,

தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. சட்டசபை தொகுதியில் மொத்தம் 286 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கலைக்கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு உள்ள பழைய கட்டிடத்தில் உள்ள அறையில் அவை வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இங்கு வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது இதற்காக 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் தேர்தல் மேற்பார்வையாளர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.

எந்திரங்கள் பழுது

முன்னதாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துவரப்பட்டு வாக்கும் என்னும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கியது. தஞ்சை தொகுதியில் 21 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடி எண் 42, 56, 91, 146 ஆகிய வாக்குச்சாவடி களில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள் பழுதடைந்ததால் அந்த எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண முடியவில்லை. எனவே எந்திரங்களை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் எந்திரங்களில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முடியாததால் அந்த வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட விவிபாட் எந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளை கொண்டு எண்ணும் பணி நடைபெற்றது.

நாடாளுமன்ற தொகுதி

இதைப்போல தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் உள்ள 3 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரத்தநாடு தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் ஒரு வாக்குப்பதிவு எந்திரமும், மன்னார்குடியில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், தஞ்சையில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், திருவையாறில் ஒரு வாக்குப்பதிவு எந்திரமும் பழுதடைந்திருந்தது. இந்த எந்திரங்களில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட விவிபாட் எந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ணி வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

Next Story