நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் அமோக வெற்றி


நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் அமோக வெற்றி
x
தினத்தந்தி 23 May 2019 11:00 PM GMT (Updated: 23 May 2019 8:59 PM GMT)

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ப.காளியப்பனை விட 2 லட்சத்து 65 ஆயிரத்து 151 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

நாமக்கல்,

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் ப.காளியப்பன், தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஏ.கே.பி.சின்ராஜ் உள்பட 29 பேர் போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடந்தது.

இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை மையமான திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன. இங்கு நேற்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஓட்டு எண்ணும் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சட்டமன்ற தொகுதி வாரியாக 19 முதல் 25 சுற்றுகளாக அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டன.

கொ.ம.தே.க. வேட்பாளர் முன்னிலை

மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் ஓட்டுப்பதிவின் போது ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. எனவே நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு மேஜையிலும், 2 மின்னணு எந்திரங்களில் பதிவான 29 வேட்பாளர்களின் ஓட்டுகள் விவரங்களும் அரசியல் கட்சி முகவர்களிடம் காண்பிக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது.

வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே ஆயிரக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் முன்னிலை வகித்து வந்தார். 23-வது சுற்றில் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளர் முன்னிலை பெற்றார். மீதமுள்ள அனைத்து சுற்றுகளிலும் கொ.ம.தே.க. வேட்பாளர் முன்னிலை வகித்தார்.

அமோக வெற்றி

நேற்று இரவு வாக்கு எண்ணிக்கை முடிவில், 2 லட்சத்து 65 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில் கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் அமோக வெற்றி பெற்றார். முன்னதாக ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விவரம், விவிபாட்டில் உள்ள ஒப்புகைச்சீட்டு எண்ணப்பட்டு சரிபார்க்கப்பட்டன. இதையடுத்து வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஆசியா மரியம் வழங்கினார்.

அப்போது, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி செல்வன், கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தவைவர் தேவராஜன், இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநில இளைஞர் அணி இணை செயலாளர் சந்திரசேகர், தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கொ.ம.தே.க. வெற்றி பெற்ற தகவலை அறிந்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஓட்டு எண்ணும் மையம் முன்பும் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். மேலும் நாமக்கல்லில் அண்ணா உருவச்சிலைக்கு தி.மு.க. கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கொ.ம.தே.க. கட்சி தொடங்கியதில் இருந்து இதுவரை எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தல்களில் பலமுறை போட்டியிட்டு இருந்தாலும் இப்போது முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொகுதியில் கொ.ம.தே.க., அ.தி.மு.க. வேட்பாளர்களை தவிர மீதமுள்ள 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். நோட்டாவுக்கு 15 ஆயிரத்து 73 ஓட்டுகள் கிடைத்திருந்தது.

வேட்பாளர்கள் ஓட்டு விவரம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள்-14,13,246

பதிவானவை- 11,33,984

ஏ.கே.பி.சின்ராஜ் (கொ.ம.தே.க) - 6,26,293

ப.காளியப்பன் (அ.தி.மு.க.) - 3,61,142

பா.பாஸ்கர் (நாம் தமிழர் கட்சி) - 38,531

ரா.தங்கவேலு (மக்கள் நீதிமய்யம்) - 30,947

பி.பி.சாமிநாதன் (அ.ம.மு.க.) - 23,347

நோட்டா- 15,073

வெ.ராமன் (பகுஜன் சமாஜ்கட்சி) - 3,579

தி.ரமேஷ் (அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி) - 972

சீ.செந்தில்முருகன் (தேசிய மக்கள் சக்தி கட்சி) - 644

சீ.மாணிக்கம் (உழைப்பாளி மக்கள் கட்சி) - 777

மு.பெ.முத்துசாமி (இந்திய கனசங்கம் கட்சி) - 1,011

என்.கே.எஸ்.சக்திவேல் (சுயே) - 4,398

வ.ஆறுமுகம் (சுயே) - 762

ந.ராமசாமி (சுயே) - 1,868

ப.ராமசாமி (சுயே) - 726

கா.காளியப்பன் (சுயே) - 1,821

செ.காளியப்பன் (சுயே) - 1,177

பெ.காளியப்பன் (சுயே) - 2,632

சு.சக்திவேல் (சுயே) - 2,544

ர.சரவணவேல் (சுயே) - 2,935

எஸ்.சிவராஜி (சுயே) - 341

சு.செல்லத்துரை (சுயே) - 288

கே.ஆர்.செல்வராஜ் (சுயே) - 448

வெ.சோ (சுயே) - 459

மு.நடராஜன் (சுயே) - 2,362

ப.நல்லதம்பி (சுயே) - 526

கு.பிரபு (சுயே) - 587

ரா.ரமேஷ் (சுயே) - 683

வி.வினோத்குமார் (சுயே) - 4,857

பா.விஜயகார்த்திகேயன் (சுயே) - 2,044

Next Story