ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 7:45 PM GMT)

அனைத்துநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

திருச்சி ரெயில் நிலையம் அருகே ஒரு ஓட்டலில், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் நம்பிராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய செயலாளர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநில பொருளாளர் சந்திரசேகர் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஊதிய முரண்பாடுகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய மாற்றம் உள்பட அனைத்துநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். 2003-ம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு இருந்த இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கு 2006-ம் ஆண்டு மே மாதம் 31-ந் தேதி வரை உள்ள காலத்தினை பணிவரன்முறை செய்ய வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்ற ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட 17பி பிரிவு குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்திட வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு பள்ளிகளை மூடுதல், உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளை இணைத்திடும் கொள்கை முடிவினை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் துணை பொதுச் செயலாளர் முனியாண்டி, துணைத்தலைவர்கள் எழிலரசன், கனகராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி எட்வர்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story