எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என சொல்ல முடியாது எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்த பின் ரமேஷ் ஜார்கிகோளி பேட்டி


எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என சொல்ல முடியாது எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்த பின் ரமேஷ் ஜார்கிகோளி பேட்டி
x
தினத்தந்தி 26 May 2019 11:00 PM GMT (Updated: 26 May 2019 10:22 PM GMT)

பெங்களூருவில், எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்த ரமேஷ் ஜார்கிகோளி, எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என சொல்ல முடியாது என்று நிருபர்களிடம் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாைவ பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, சுதாகர் ஆகியோர் சந்தித்து பேசினர். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பின்போது, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உள்பட கட்சியின் முன்னணி தலைவர்கள் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு சுதாகர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எஸ்.எம்.கிருஷ்ணா நல்ல அரசியல்வாதி. அதனால் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. நான் பேசிக்கொண்டிருந்தபோது, பா.ஜனதா தலைவர் எடியூரப்பா வந்தார். அவருடன் நாங்கள் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. இது திட்டமிட்டு நடைபெறவில்லை. நான் காங்கிரசில் நீடிப்பேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இந்த சந்திப்புக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம். இவ்வாறு சுதாகர் கூறினார்.

ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் தனியாக தான் உள்ளேன். காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். நான் எப்போது ராஜினாமா செய்வேன் என்பதை இப்போது சொல்ல முடியாது. எஸ்.எம்.கிருஷ்ணா மூத்த தலைவர். அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன்.

வேறு எந்த விஷயங்கள் குறித்தும் நாங்கள் ஆலோசிக்கவில்லை. நான் ராஜினாமா செய்வதற்கு முன்பு ஊடகங்களுக்கு தகவல் தெரிவிப்பேன். நீங்கள் (ஊடகங்கள்) ‘ஸ்டிங் ஆபரேஷன்’ செய்கிறீர்கள். அதை முன்கூட்டியே சொல்லிவிட்டு செல்வீர்களா?.

எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்கிறார்கள் என்பதை இப்போதே சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, நான் ராஜினாமா செய்வதற்கு முன்பு, உங்களிடம் கூறுவேன். இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, சுதாகர் ஆகியோரை பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, மூத்த தலைவர் ஆர்.அசோக் சந்தித்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆபரேஷன் தாமரை மீண்டும் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பா.ஜனதா தலைவர்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story