மானாமதுரையில் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை; நடைபயிற்சி சென்ற போது பயங்கரம்


மானாமதுரையில் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை; நடைபயிற்சி சென்ற போது பயங்கரம்
x
தினத்தந்தி 27 May 2019 12:00 AM GMT (Updated: 26 May 2019 10:26 PM GMT)

மானாமதுரை அ.ம.மு.க. நிர்வாகி நடைபயிற்சி சென்ற போது வெட்டி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாண்டியன் நகரில் வசித்து வருபவர் சரவணன் (வயது 38). இவர் மானாமதுரை அ.ம.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். மேலும் அ.தி.மு.க.வில் இருந்த போது மானாமதுரை 13–வது வார்டு கவுன்சிலர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தார். பின்பு டிடிவி தினகரன் அ.ம.மு.க. கட்சி தொடங்கிய போது, அ.தி.மு.க.வில் இருந்து விலகி அ.ம.மு.க.வில் சேர்ந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், அபிராமி, சுகன்யா, மணிகண்டன் என்ற மகள்கள், மகனும் உள்ளனர்.

இவர் நேற்று காலை மானாமதுரை வைகை ஆற்றின் அருகே உள்ள கல்குறிச்சி புதிய பாலத்தில் நடைபயிற்சி செய்து வந்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் சரவணனை வழிமறித்து நின்று வெட்டியது. அப்போது அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார்.

ஆனால் அந்த கும்பல் சரவணனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் சரவணன் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் உடலை சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சரவணன் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஒப்பந்த தொழிலில் டெண்டர் எடுப்பதில் ஏதேனும் பிரச்சினை காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா என்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் முன்னதாக சிவகங்கையில் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து கொலை செய்யப்பட்ட சரவணனின் உறவினர்களும், சொந்த ஊரை சேர்ந்தவர்களும், உடலை வாங்க மறுத்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட செயலாளர் உமாதேவன், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி உள்பட ஏராளமான அ.ம.மு.க.வினர் மருத்துவமனையில் குவிந்தனர்.

தகவலறிந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கபட்டுள்ளது. இவர்கள் 20–க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.


Next Story