பவானி சங்கமேஸ்வரர் கோவில் வேதநாயகி யானை எழுந்து நிற்க முடியாமல் அவதி கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி புனே டாக்டர்கள் சிகிச்சை


பவானி சங்கமேஸ்வரர் கோவில் வேதநாயகி யானை எழுந்து நிற்க முடியாமல் அவதி கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி புனே டாக்டர்கள் சிகிச்சை
x
தினத்தந்தி 28 May 2019 3:45 AM IST (Updated: 28 May 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

பவானி சங்கமேஸ்வரர் கோவில் வேதநாயகி யானை எழுந்து நிற்கமுடியாமல் முடியாமல் அவதிப்பட்டது. இதைத்தொடர்ந்து கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி புனே டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் கடந்த 45 ஆண்டுகளாக உபயமாக ஒரு யானை கொடுத்தனர். அந்த யானைக்கு வேதநாயகி என பெயர் சூட்டி கோவில் நிர்வாகத்தினர் பராமரித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு யானைக்கு திடீரென வலது மற்றும் இடது கால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டது.

மேலும் சிமெண்ட் தரைகளில் படுத்து எழுந்திருக்கும் போது யானையின் முழங்கால்களும் புண்ணானது. இதைத்தொடர்ந்து கோவையில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு சிகிச்சை கொடுத்தனர். வாரத்திற்கு 2 முறை பவானி கால்நடை டாக்டர் சேகர் என்பவர் வந்திருந்து சிகிச்சை கொடுத்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் மறுவாழ்வு முகாமிலும் வேதநாயகி கலந்து கொண்டு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மறுவாழ்வு முகாமிலும் யானையால் பங்கேற்க முடியவில்லை. இதனால் டாக்டர்கள் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்து முகாமில் வழங்கப்படும் அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் யானைக்கு அளித்து வருகின்றனர்.

எனினும் யானையின் உடல் எடை அதிகமாக இருந்ததாலும் அதன் கால் பாத நகங்களில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவும் புண்கள் தொடர்ந்து ஆறாததால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து யானையின் உடல் எடையை குறைக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

அதன்படி யானைக்கு கோவில் வளாகத்தில் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் நடை பயிற்சியில் ஈடுபட்டது. அதுதவிர சிறப்பு லேகியம் மற்றும் பயிறு வகை உணவுகள், கீரை வகைகள், தானியங்கள், பேரீச்சை பழங்கள் உணவாக வழங்கப்பட்டது. மேலும் கரும்பு சோகை மற்றும் சோளப்பயிர்கள் ஆகியவையும் உணவாக வழங்கப்பட்டு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் யானை வேதநாயகியை கண்காணித்து சிறப்பு சிகிச்சை அளிக்க மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து டாக்டர் ராமநாதன் என்பவர் தலைமையில் மருத்துவ குழுவினர் வந்திருந்தனர்.

இவர்கள் பாகன் செல்வனை அழைத்து யானை குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் யானைக்கான மருத்துவம் பற்றியும் அதன் காலில் உள்ள புண்கள் ஆறுவதற்கும் புண்ணில் ஈக்கள் மொய்க்காத வண்ணம் பராமரிக்க பாதரட்சையும் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து டாக்டர்கள் யானையை பரிசோதித்தபோது சோர்வாக காணப்பட்டது தெரியவந்தது. எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து யானை எழுந்து நிற்க வைக்க பாகன் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கோவிலுக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு யானைக்கு பெல்ட்டுகள் அணிவிக்கப்பட்டு எழுந்து நிற்க வைக்கப்பட்டது. அதன்பின்னர் யானைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

யானையின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பரிதாபத்தை ஏற்படுத்தியது.


Next Story