நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே சிறந்தது என பேட்டி
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். வாக்குச்சீட்டு முறையே சிறந்தது என்று அவர் கூறினார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். வாக்குச்சீட்டு முறையே சிறந்தது என்று அவர் கூறினார்.
சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தீவிரமாக இருந்தார்.
அந்த தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார். காலை 11.45 மணிக்கு சிறைக்குள் சென்ற டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சசிகலாவை சந்தித்துவிட்டு மதியம் 1 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சிறப்பாக பணியாற்றுங்கள்
1989-ம் ஆண்டு முதல் இதுவரை பல தேர்தல்களை சந்தித்துள்ளேன். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது தான். தோல்வியை கண்டு யாரும் சோர்வடையாமல் அடுத்து வரும் தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றுங்கள் என்று சசிகலா கூறினார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில், எனக்கு கிடைத்த தகவலின்படி 30 தொகுதிகளில் அமைந்திருந்த 588 வாக்குச்சாவடிகளில் எங்கள் கட்சிக்கு ஒரு ஓட்டுகூட விழவில்லை. எனது வாக்குச்சாவடியில் எங்கள் கட்சிக்கு 14 ஓட்டுகள் தான் வந்துள்ளன.
தேர்தல் ஆணையத்தில்...
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அ.ம.மு.க.வினர் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்தார்களா? என்று கேட்டுள்ளார். ஆதாரம் இல்லாமல் தேர்தல் ஆணையத்தில் முறையிட முடியாது. அதனால் ஆதாரங்களை திரட்டி வருகிறோம். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்.
எங்கள் கட்சியின் ஒன்றிய செயலாளர் வசித்து வரும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் எங்கள் கட்சிக்கு ஒரு ஓட்டுகூட கிடைக்கவில்லை. இது எப்படி சாத்தியம். இவை எல்லாவற்றுக்கும் நாங்கள் ஆதாரங்களை தேடி வருகிறோம். கிடைக்கும் ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவோம். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க முடியும். இதை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். தேனி தொகுதியில் முறைகேடு நடந்திருப்பதாக அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறார். அதையேதான் நாங்கள் கூறுகிறோம்.
வாக்குச்சீட்டு முறை
நாங்கள் கட்சியை சரியான முறையில் தான் நடத்தி செல்கிறோம். வருகிற 1-ந் தேதி கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசனை நடத்துவோம். அடுத்து நாங்குநேரி சட்டமன்றம், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு நாங்கள் தயாராவோம்.
தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே சிறந்தது. இதற்காக சந்திரபாபுநாயுடு உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் வாக்குச்சீட்டு முறை தான் பயன்படுத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. தவறு நடக்க வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
தேர்தலில் எங்கள் கட்சி நிர்வாகிகள் யாராவது தவறு செய்திருந்தால் அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் வாக்குகள் எங்கே சென்றது என்பது தெரியாமல் உள்ளோம்.
தமிழக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது, எங்கள் ‘சிலிப்பர் செல்கள்’ வெளியே வருவார்கள். இதை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எங்களிடம் பலம் இல்லை. தி.மு.க.விடம் தான் அதற்கான பலம் உள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வெற்றி
மோடியின் அலையால் பா.ஜனதா வெற்றி பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அது அவரது கருத்து. ஆனால் என்னை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.
Related Tags :
Next Story