வானவில் : வெள்ளி விழா கொண்டாடும் வெற்றி வாகனம் டி.வி.எஸ். ஸ்கூட்டி


வானவில்  : வெள்ளி விழா கொண்டாடும் வெற்றி வாகனம் டி.வி.எஸ். ஸ்கூட்டி
x
தினத்தந்தி 29 May 2019 8:51 AM GMT (Updated: 29 May 2019 8:51 AM GMT)

1980களின் பிற்பாதியில் இந்தியாவில் சைக்கிளுக்கு அடுத்த கட்டமாக இருசக்கர வாகனங்கள் புழக்கத்துக்கு வரத் தொடங்கின.

ஆரம்பத்தில் குறைந்த குதிரைத் திறன் கொண்ட 2 ஸ்டிரோக் வாகனங்கள் வரத் தொடங்கின. இவை ஏறக்குறைய சைக்கிளின் சிறிய வடிவமாகவே இருந்தது.ஸ்கூட்டர்கள் அளவில் பெரியனவாகவும், கனமாகவும் இருந்தன. மேலும் ஒரு பக்கமாக என்ஜின் அமைக்கப்பட்டிருந்ததால் ஸ்கூட்டரை விரும்புவோர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. சைக்கிளுக்கு மாற்றாகவும் அதேசமயம் சவுகரியமாக பயணிக்கவும், எளிமையாக உபயோகிக்கும் வகையில் இருந்தவை மொபெட்டுகள்.

மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபெட் என அனைத்துமே ஆண்களுக்கான வாகனங்களாக இருந்தன. அந்த காலகட்டத்தில்தான் பெண்கள் அலுவலகத்துக்கு செல்லும்போக்கு அதிகரித்தது. கல்லூரியில் பயிலும் மாணவிகளும் தங்களின் போக்குவரத்துக்கு எளிய வழியை தேடினர். இவர்களின் தேடலுக்கு தீர்வை அளித்தது டி.வி.எஸ். ஸ்கூட்டி. பார்ப்பதற்கு அழகிய தோற்றம், கையாள்வதில் எளிமையான நடைமுறை, பெண்களும் இதைக் கற்றுக் கொள்வதில் சிரமம் இல்லாமலிருந்தது ஆகியன ஸ்கூட்டியின் பக்கம் பெண்களின் பார்வையை திருப்பியது.

சாலைகளில் பெண்களும் சரிநிகர் சமமாக வலம் வர உதவியதில் ஸ்கூட்டியின் பங்களிப்பு மிகவும் அதிகமாகும். மேலும் பெண்களுக்கான போக்குவரத்து வசதியை எளிமைப்படுத்தியதும் வாகனங்கள்தான்.

ஸ்கூட்டி தனது 25-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. ஆம் இந்திய சாலைகளில் ஸ்கூட்டி தவழத் தொடங்கி வெள்ளிவிழா காணும் வெற்றி வாகனமாகத் திகழ்கிறது. தொடக்கத்தில் இருபாலரும் பயன்படுத்தும் வகையில்தான் ஸ்கூட்டி அறிமுகமானது. ஸ்கூட்டரில் இல்லாத ஒரே சாதக அம்சம், இதன் என்ஜின் மையத்தில் இருந்ததுதான். மேலும் கிளட்ச் பிடித்து, கியர் மாற்றி வாகனத்தை செலுத்த வேண்டிய தேவையும் இல்லாமலிருந்தது. சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர் எளிதாக இயக்கும் வகையில் இதன் வடிவமைப்பு இருந்ததே இது பெருமளவு வரவேற்பைப் பெற்றதற்கு முக்கியக் காரணமாகும். இடது கையில் பின் சக்கர பிரேக், வலது கையில் ஆக்சிலரேட்டர் அவ்வளவுதான். சற்று நிதானித்து இதை ஒரு முறைக்கு இரண்டு முறை மனதில் சொல்லிக்கொண்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்தால் அப்புறம் உங்கள் வசப்பட்டுவிடும் வாகனமாக ஸ்கூட்டி இருந்தது.

1996-ம் ஆண்டு உதைத்து ஸ்டார்ட் செய்யும் வகையில் வந்த ஸ்கூட்டி மொபெட்டுகள் 2003-ம் ஆண்டிலிருந்து பெண்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் ஸ்டார்ட் செய்ய வசதியாக செல்ப் ஸ்டார்ட் (பட்டன்) வசதி செய்யப்பட்டது கூடுதல் சிறப்பு. மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் ஸ்கூட்டி பற்றி தகவல் தொகுப்பு இதோ...

உமன் ஆன் வீல்ஸ்: ஆண்களை இலக்காகக் கொண்டு சந்தைப்படுத்துவதை விட மகளிருக்கான வாகனமாக இதை மாற்றி மகளிரை பிரதான வாடிக்கையாளராக்க முடிவு செய்து அதற்கேற்ப மாற்றங்களை செய்தது நிறுவனம். இதற்காக பெண்களுக்கு பெண்களால் பயிற்சியளிக்கும் நிறுவனத்தை முதல் முறையாக இந்நிறுவனம் அமைத்தது. 80 நகரங்களில் அமைக்கப்பட்ட இந்த மையம் மூலம் 42 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது நாட்டில் வாகனம் ஓட்டும் மகளிரில் 20 சதவீதம் பேர் இந்நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.

ஸ்பெஷல் எடிஷன்: வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இரண்டு கண்கவர் வண்ணங்களில் ஸ்கூட்டி பெப்பிளஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம். ரெவிங் ரெட், கிளிட்டரிங் கோல்ட் ஆகிய இரண்டுமே பெண்களை அதிகம் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. வெள்ளி விழா கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் 25 வருட எடிஷன் லோகோ மற்றும் புதிய கிராபிக்ஸ் டிசைன்களுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது.

தங்களது தினசரி பயணத்தை சவுகரியமாகவும், சிக்கனமாகவும், பாதுகாப்பாகவும், உற்சாகவும் மேற்கொள்ள விரும்பும் இன்றைய நவீன இளம்பெண் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உண்மையாக, நேர்மையாக இருப்பதில் டி.வி.எஸ். ஸ்கூட்டி முக்கியத்துவம் அளித்து வருகிறது. காலங்களுக்கேற்ப மாற்றங்களை புகுத்தி, வாடிக்கையாளரின் தேவையை அறிந்து அதற்கேற்ப வாகனங்களை வடிமைத்து தரும் ஸ்கூட்டி காலங்களைக் கடந்தும் வெற்றிகரமாக வலம் வருவதன் ரகசியம் இப்போது தெரிந்திருக்குமே.! 

Next Story