அரசு பள்ளியில் படித்து 10-ம்வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவர் குடும்பத்துக்கு பசுமை வீடு ஒதுக்கீடு - கலெக்டர் வழங்கினார்
அரசு பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவருக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணி ஆணையினை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.
சிவகங்கை,
நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிங்கம்புணரி வட்டம், எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த அய்யனார்புரத்தை சேர்ந்த சண்முகவேல் என்ற மாணவர் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இவரது தந்தை ராஜ்குமார் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். தாய் அழகுமீனாள் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக உள்ளார்.
இந்தநிலையில் அரசு பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர் சண்முகவேலுக்கு உயர் கல்வி வரை படிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர், மாணவருக்கு காசோலையை வழங்கினார்.
அத்துடன் மாணவரின் குடும்பத்துக்கு ரூ.2.30 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடு திட்டத்தில் புதிய வீடு கட்ட ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமகாலிங்கம் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story