கோடை வெயிலை சமாளிக்க முக்கூடலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்


கோடை வெயிலை சமாளிக்க முக்கூடலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 29 May 2019 11:30 PM GMT (Updated: 29 May 2019 6:55 PM GMT)

கோடை வெயிலை சமாளிக்க முக்கூடலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள். அவர்கள் குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றில் உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள்.

நெல்லை, 

இயற்கை எழில் மிகுந்த நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா தலமாக குற்றாலம், பாபநாசம், குண்டாறு, மணிமுத்தாறு, மாஞ்சோலை, அகஸ்தியர் அருவி உள்ளிட்ட ஏராளமான இடங்கள் உள்ளன. மேலும் கடனாநதி, ராமநதி அணைப்பகுதிகளும் உள்ளன. இங்கு கோடை விடுமுறையையொட்டி மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்.

ஆனால் பாபநாசம் அணை நீர்மட்டம் 9 அடியாக குறைந்ததால் அணை வறண்டது. இதனால் அகஸ்தியர் அருவியிலும், தலையணையிலும் தண்ணீர் குறைந்துவிட்டது. ராமநதி, கடனாநதி அணையும் முழுவதுமாக வறண்டு விட்டது. இதனால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு கடையம், அம்பை, பாவூர்சத்திரம் பகுதியில் வாரத்திற்கு ஒரு நாள் தான் குடிதண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது. தற்போது குடிநீர் தேவைக்காக மணிமுத்தாறு அணையில் 63 அடி தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு 17 கன அடி தண்ணீர் கசிவு நீராக வந்து கொண்டு இருக்கிறது. இதில் குடிநீருக்காக 275 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதேபோல் பாபநாசம் அணைக்கு 14.82 கன அடி தண்ணீர் கசிவு நீராக வந்து கொண்டு இருக்கிறது. இதில் குடிநீருக்காக 25 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மணிமுத்தாறு அணையில் இருந்து திறந்து விடப்படுகின்ற தண்ணீர் அம்பாசமுத்திரத்திற்கு கீழே தாமிரபரணி ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது.

இதேபோல் கடனாநதியில் இருந்தும், ராமநதி அணையில் இருந்தும் வெளியேற்றப்படும் தலா 2 கனஅடி கசிவு நீரும் கருணையாற்றில் வந்து கொண்டு இருக்கிறது. தாமிரபரணி தண்ணீரும், கருணையாற்று தண்ணீரும் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் அங்கு இந்த கோடை வெயிலில் தண்ணீர் ஓடுகிறது. முக்கூடலில் தாமிரபரணி ஆறு பரந்து விரிந்து காணப்படுவதால் ஆற்றில் ஆழம் கிடையாது. மேலும் ஆற்றில் மணல் அதிக அளவில் பரவி கிடப்பதால் தண்ணீரும் தெளிவாக ஓடுகிறது. மேலும் குளிப்பதற்கு இதமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது.


முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் முத்துமாலை அம்மன் கோவில் உள்ளது. அந்த பகுதியில் மருதமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்கள் அமைந்திருப்பதால் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது. குற்றாலம் அருவிகள், பாபநாசம் தலையணையில் குளிக்க போதிய தண்ணீர் வசதி இல்லாததால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிப்பதற்கு முக்கூடல் தாமிரபரணி ஆற்றிற்கு படை எடுத்து வருகிறார்கள்.

கோடை விடுமுறை தினங்களில் தினமும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் அங்கு 25-க்கும் மேற்பட்ட வேன், கார்களில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து ஆற்றில் உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள். இங்கு வரும் மக்கள் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்வதற்கும், சாப்பிடுவதற்கும் அங்குள்ள கோவில் கலையரங்கத்தில் போதிய வசதிகள் உள்ளன. இதனால் கோடை விடுமுறையை நல்லபடியாக கழிக்க பொதுமக்கள் முக்கூடலை தேர்ந்து எடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடுகிறது. அதிக ஆழம் இல்லாததால் குடும்பத்தோடு வந்து குளிக்க பாதுகாப்பான இடமாக உள்ளது. ஆற்றின் கரையில் மரங்கள் அமைந்திருப்பதால் குளிர்ச்சியாக உள்ளது. வெயிலே தெரிவதில்லை. தங்குவதற்கு தேவையான இடவசதியும் உள்ளது. இங்கு வந்து ஆற்றில் குளிக்கும் பெண்களுக்கு துணி மாற்றுவதற்கு நகர பஞ்சாயத்து சார்பில் இடவசதி செய்து கொடுக்கவேண்டும். மேலும் இங்கு சேருகின்ற குப்பைகளை மரத்தடியில் குவித்து வைத்துள்ளனர். அதை உடனுக்குடன் அகற்றவேண்டும். மக்கள் அதிக அளவில் வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தரவேண்டும் என்றனர்.

நகர பஞ்சாயத்து அதிகாரிகள் கூறுகையில், “வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. குப்பைகள், கழிவுகளை சுகாதார பணியாளர்கள் காலையில் அள்ளி சென்றுவிடுகிறார்கள். அதன் பிறகு சேருகின்ற கழிவுகளையும் உடனுக்குடன் அள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துணி மாற்றுவதற்கு ஆற்றில் இட வசதி செய்து கொடுக்க முடியாது. ஏனென்றால் இது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தாமிரபரணி புஷ்கர விழாவின் போது தற்காலிகமாக துணிமாற்றும் அறைகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது” என்றனர்.

Next Story