திருட்டு வழக்கில் தொடர்பு: போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை


திருட்டு வழக்கில் தொடர்பு: போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Jun 2019 4:00 AM IST (Updated: 2 Jun 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

கொடைரோடு,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள மாலையகவண்டன்பட்டி ஊராட்சி செட்டியபட்டியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 58). இவர் கொடைரோட்டில் லேத் பட்டறை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர், லேத் பட்டறையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டறையின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பட்டறையில் இருந்த செல்போன், ரூ.4 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்றனர். மறுநாள் காலையில் பட்டறை திறக்க ரவீந்திரன் சென்றபோது, திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரவீந்திரன் அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் திருட்டு போன செல்போன் எண்ணை வைத்து போலீசார் துப்பு துலங்கினர். அப்போது அந்த செல்போன் செட்டியபட்டியை சேர்ந்த அஜீத்குமார் (வயது 25) என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது நண்பர் செட்டியபட்டியை சேர்ந்த திருமூர்த்தியுடன் (28) சேர்ந்து லேத் பட்டறையில் திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அஜீத்குமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய திருமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதனால் போலீசுக்கு பயந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அம்மைநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.


Next Story