கணியம்பாடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்


கணியம்பாடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:15 AM IST (Updated: 2 Jun 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

கணியம்பாடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அடுக்கம்பாறை,

வேலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து குடிநீர் பிரச்சினையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. மாவட்டத்தின் நீர்நிலைகள் அனைத்து வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையை காணமுடிகிறது. மேலும் குழாய் அடியில் பல மணி நேரம் குடிநீருக்காக காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. கணியம்பாடி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை கணியம்பாடி பஸ் நிறுத்தம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story