கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2019 3:30 AM IST (Updated: 3 Jun 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை வனப்பகுதியில் சமூகவிரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்அடிப்படையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை வனப்பகுதியில் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது எருக்கம்பட்டு பெரியாண்டவர் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக கடுக்காய், நாட்டு சர்க்கரை உள்ளிட்ட மூல பொருட்களுடன் தலா 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 பேரல்களில் சாராய ஊறல் அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார், அங்கு பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அதே இடத்தில் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்குள்ள கிராம மக்களிடம் சாராய ஊறல் அமைத்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கு சாராய ஊறலை அமைத்தது எருக்கம்பட்டை சேர்ந்த அண்ணாமலை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அண்ணாமலையை தேடி வருகின்றனர்.

Next Story