புதுச்சேரி மாநிலத்தில் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம் - நாராயணசாமி உறுதி


புதுச்சேரி மாநிலத்தில் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம் - நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 2 Jun 2019 11:30 PM GMT (Updated: 2 Jun 2019 7:35 PM GMT)

புதுவை மாநிலத்தில் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் தலைமையிலான புதிய கல்விக்கொள்கையை வகுக்கும் குழு அறிவுறுத்தி தனது வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதற்கு தமிழகம், புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தி திணிப்புக்கு புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவை மாநிலத்தில் நாம் ஏற்கனவே இருமொழி கொள்கையை கடைபிடித்து வருகிறோம். தற்போது கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு மும்மொழி கொள்கையை பரிந்துரை செய்துள்ளது.

புதுவை மாநிலத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு மொழிகளை மக்கள் பேசி வருகின்றனர். மற்ற மொழிகளை விரும்பியவர்கள் படிக்கலாம். ஆனால் அது கட்டாயம் கிடையாது. கடந்த 1965–ல் இந்தி திணிப்பின்போது தமிழகம், புதுச்சேரி பற்றி எரிந்தது.

அதனால் எந்த காலத்திலும் இந்தி திணிப்பை ஏற்கமாட்டோம். விரும்பியவர்கள் வேண்டுமானால் இந்தியை படிக்கலாம். அதையும் மீறி இந்தி திணிப்பு வந்தால் எதிர்ப்போம்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுவை முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று கஸ்தூரிரங்கன் தலைமையிலான புதிய கல்விக்கொள்கை வகுக்கும் குழு அறிவுறுத்தி உள்ளது. ஒரு மொழியை யார் வேண்டுமானாலும் பேசலாம், கற்கலாம். ஆனால் இந்தி மொழியைத்தான் கற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

புதுச்சேரியில் இருமொழிக்கொள்கையே தொடர வேண்டும். இதுதவிர புதுச்சேரி மாநிலம் பூகோள ரீதியில் 4 பிராந்தியங்களாக பிரிந்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் தமிழ், ஏனாமில் தெலுங்கு, மாகியில் மலையாளம் பேசப்பட்டும் வருகிறது. பள்ளிகளில் இவற்றுடன் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்று கற்கவேண்டும் என்று புதிய கல்விக்கொள்கை திட்டவரைவு கூறுகிறது. ஆனால் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயம் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே மத்திய அரசு புதுச்சேரி உட்பட இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தும் திட்ட வரைவினை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story