சாயல்குடி பேரூராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு; குழாய்களில் கசியும் நீரை காத்திருந்து சேகரிக்கும் அவலம்


சாயல்குடி பேரூராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு; குழாய்களில் கசியும் நீரை காத்திருந்து சேகரிக்கும் அவலம்
x
தினத்தந்தி 2 Jun 2019 10:45 PM GMT (Updated: 2 Jun 2019 7:49 PM GMT)

சாயல்குடி பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக குழாய்களில் இருந்து கசியும் நீரை கிராமத்தினர் சேகரித்து செல்லும் அவலம் நீடிக்கிறது.

சாயல்குடி,

சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட சண்முககுமாரபுரத்தில் 500–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சாயல்குடி பேரூராட்சி மூலம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம், நரிப்பையூர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் மற்றும் ஐந்து ஏக்கர் ஆழ்துளை கிணறு ஆகியவை மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

நரிப்பையூர் கடல்நீரை நன்னீராக்குவது நிறுத்தப்பட்டு விட்டதாலும், காவிரி கூட்டு குடிநீர் திட்டக்குழாய்களை பல பகுதிகளில் சேதப்படுத்தி நீர் சேகரித்து வருவதாலும் நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது. இதேபோல ஐந்து ஏக்கர் ஆழ்துளை கிணறு மூலம் செய்யப்பட்டு வந்த குடிநீர் வினியோகமும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதி மக்கள் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் இருந்து கசியும் நீரை இரவு பகலாக காத்திருந்து சேகரித்து செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை பெண்கள் கூறியதாவது:– எங்கள் பகுதிக்கு குடிநீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் குழாய்களில் இருந்து கசியும் நீரை சேகரித்து பயன்படுத்தி வருகிறோம். மேலும் இந்த பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.7–க்கு விற்பனை செய்கின்றனர். விவசாயம் சார்ந்த தொழில் புரியும் நாங்கள் குடிக்கவும், பிற தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் என நாள் ஒன்றுக்கு ரூ.105–க்கு மேல் தண்ணீருக்காக செலவு செய்ய வேண்டியுள்ளது. இது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கும். விவசாயம் பொய்த்த நிலையில் விவசாய தொழிலும் இல்லாமல் எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. இரவு நேரங்களில் குழாயில் இருந்து கசியும் நீர் அருகில் தேங்கி ஆடு–மாடுகளுக்கு குடிநீராக பயன்படுகிறது. இந்த சுகாதாரமற்ற நீரை பருகுவதால் இப்பகுதியில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகளுக்கு பலர் ஆளாகி வருகின்றனர். எனவே சுகாதாரமான குடிநீர் எங்களுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story