சிதம்பரம் அருகே தீயில் கருகி பெண் சாவு


சிதம்பரம் அருகே தீயில் கருகி பெண் சாவு
x
தினத்தந்தி 2 Jun 2019 10:00 PM GMT (Updated: 2 Jun 2019 8:14 PM GMT)

சிதம்பரம் அருகே தீயில் கருகி பெண் இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் பலத்த காயமடைந்தார்.

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே கவரப்பட்டு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். கொத்தனார். இவருடைய மனைவி நளினி (வயது 36). இவர்களுக்கு சுர்த்திகா (7) என்ற மகளும், ரித்திக் (4) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் விறகு அடுப்பில் நளினி சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அடுப்பின் அருகே இருந்த மண்எண்ணெய் பாட்டில் தவறி கீழே விழுந்தது. இதில் நளினி மீது மண்எண்ணெய் கொட்டியது. அந்த சமயத்தில் திடீரென விறகு அடுப்பில் இருந்து தீப்பொறி, நளினியின் சேலை மீது விழுந்து தீப்பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் வலிதாங்க முடியாமல் நளினி அலறினார்.

அப்போது வீட்டில் இருந்த குணசேகரன், செய்வது அறியாது திகைத்து நின்றார். பின்னர் நளினியை அவர் காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து நளினி மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நளினி நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த குணசேகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story