மேச்சேரி அருகே போலீஸ்காரர் உள்பட 2 பேர் பீர்பாட்டிலால் தாக்கப்பட்டனர் 4 பேர் கைது


மேச்சேரி அருகே போலீஸ்காரர் உள்பட 2 பேர் பீர்பாட்டிலால் தாக்கப்பட்டனர் 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2019 11:00 PM GMT (Updated: 2 Jun 2019 8:40 PM GMT)

மேச்சேரி அருகே போலீஸ்காரர் உள்பட 2 பேர் பீர்பாட்டிலால் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேச்சேரி, 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பள்ளிப்பட்டி ஊராட்சி நாகோசிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 25). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை மல்லிகுந்தம் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லிகுந்தம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த வைரமணி, இளங்கோ, கலையரசன், ஜென்டில் ஆகிய 4 பேரும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.இதைபார்த்த செல்வராஜ் ஹாரன் அடித்தார். ரோட்டில் ஓரமாக செல்லுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து செல்வராஜூக்கும், மற்றவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வைரமணி பீர்பாட்டிலால் செல்வராஜ் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மற்ற 3 பேரும் சேர்ந்து தாக்கினர்.

அப்போது மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்த செல்வராஜின் உறவினர் கார்த்திகேயன் (32) என்பவர் அங்கு வந்தார். கார்த்திகேயன் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார். செல்வராஜை தாக்கியதை கார்த்திகேயன் தட்டிக்கேட்டார். உடனே வைரமணி, இளங்கோ, கலையரசன், ஜென்டில் மற்றும் அங்கு வந்த கனிவழவன், தங்கவேல் ஆகிய 6 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் கார்த்திகேயன் தலை, முகத்தில் பீர்பாட்டிலால் தாக்கினர். கம்பியை எடுத்தும் தாக்கினார்கள். இதில் கார்த்திகேயன், செல்வராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். பின்னர் 2 பேரும் தனியார் ஆம்புலன்சு மூலம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரமணி, கலையரசன், இளங்கோ, கனிவழவன் ஆகியோரை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து மல்லிகுந்தம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story