நெல்லை அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் லாரி-காரை சேதப்படுத்திய மர்ம நபர்கள்


நெல்லை அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் லாரி-காரை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 2 Jun 2019 10:15 PM GMT (Updated: 2 Jun 2019 10:04 PM GMT)

நெல்லை அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் லாரி, காரை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடிக்காத நிலையில் கிடந்த நாட்டு வெடிகுண்டால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை, 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடியை சேர்ந்த சிவன்பால் மகன் தாசன் (வயது 39). முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவரது சகோதரி வீடு நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் வ.உ.சி. காலனி 5-வது தெருவில் உள்ளது. தாசன், சொந்தமாக லாரிகள் வைத்து சரக்குகள் சப்ளை செய்து வருகிறார்.

தாசன் சகோதரி குடும்பத்துடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அன்னை வேளாங்கண்ணி ஆலயத்துக்கு சென்றார். இதனால் தாசன் தனது 2 லாரிகளையும், ஒரு காரையும் சகோதரி வீட்டின் முன்பு நிறுத்தினார்.

நேற்று காலை தாசன் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 லாரிகளும், காரும் உருட்டு கட்டையால் தாக்கப்பட்டு இருந்தது. இதில் லாரியின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. காரும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் லாரிக்கு அருகே ஒரு நாட்டு வெடிகுண்டு வெடிக்காத நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாசன் இதுபற்றி பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது அங்கு கிடந்த வெடிக்காத நாட்டு வெடிகுண்டை போலீசார் கைப்பற்றினர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டியின் காரணமாக யாராவது மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டு இருந்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக லாரி கண்ணாடி உடைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story