கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளியில் குரங்குகள் அட்டகாசத்தால் மாணவிகள் அவதி
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குரங்குகள் அட்டகாசத்தால் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதம் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் நேற்று காலை பள்ளி தொடங்கியதும், பள்ளிக்கு 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் வந்தன.
அவை மாணவிகள் வைத்திருந்த பையில் இருந்து டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள மரக்கிளைகளின் மீது ஏறிக் கொண்டன.
அதே போல மாணவிகளின் பையில் இருந்த புத்தகங்கள், நோட்டுகளை குரங்குகள் வெளியில் எடுத்து பார்த்தன. இதை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த சிலர் குச்சிகளை வைத்து குரங்குகளை விரட்டினார்கள். இதையடுத்து மரக்கிளைகளில் இருந்த குரங்குகள் தண்ணீர் பாட்டில்கள், டிபன் பாக்சுகளை மேலே இருந்து கீழே போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டன.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளி வளாகத்தில் குரங்குகள் அட்டகாசம் நீண்ட நாட்களாக இருப்பதாக மாணவிகள் சிலர் கூறினார்கள். மேலும் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.
அந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story